ஆ.கோகுலன் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தான் வலைப்பதிவுக்கு “சும்மா கொஞ்ச நேரம்” ஒதுக்கி வந்து, இப்போது அடுத்து ஆடும் ஒருவர். யாழ்ப்பாணத்து உரும்பிராயை சேர்ந்தவர் ஆனந்தராசா கோகுலன் என்னும் இவர் தற்போது பணி நிமித்தம் கொரியாவில் வசிப்பவர். அதிகம் எழுதமாலே, பிறரின் நேரத்தை பங்குபோடுவதை உணர்ந்தவர் போல வித்தியாசமாகதாகவும், விரும்பத்தக்கதாகவும் எழுதுபவர். சில விசயங்களில் ஒரு முனைவர் பட்டப்படிப்பு மாணவன் போல ஆராய்வது இவரது வழக்கமானது. இருந்தும் மிகவும் தன்னடக்கமாக
“சரக்கில்லாமல் கண்டதையும் எழுத வேண்டாமே என்றுதான் வசதியாக “சும்மா கொஞ்ச நேரம்” என்று பெயர் வைத்துள்ளேன்” என்று மின்னஞ்சல் வழி பகிர்பவர்.
இவர் படம் பார்க்கிறார், பாட்டுக் கேட்கிறார், கவிதைகளையும் இன்ன பிறவையும் வாசிக்கின்றார் என்று வெறுமனே சொல்ல முடியாது. ஏனென்றால் ஒவ்வொன்றையும் 360 பாகை நோக்குடன் பிபிசி தமிழோசையில் போகும் பெட்டகச்செய்தி போல வட்டமடிப்பார். உதாரணமாக தனது நினைவில் நிற்கும் கவிதைகள் பற்றி “இம்சை இனிமை கவிதை” என்ற பெயரில் எழுதியிருக்கும் பதிவில் மகாகவியின் கவிதையில் இருந்து, யாழ்ப்பாணத்தில் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வெளிவந்த சீரஞ்சீவி வாரமலரில் சின்னதாய் ஒரு மூலையில வெளிவந்த கவிதை வரைக்கும் ஞாபகம் வைத்து எழுதியிருக்கிறார்.
விருந்தாளி பையில் திராட்சை
நீண்ட நேரப் பேச்சு
உறங்கிப்போனது குழந்தை
இது கவிஞர் நா.விஸ்வநாதனின் கவிதை. எப்போது வாசித்தாலும் பட்டென்று ஒட்டிக்கொள்ள கூடிய வரிகளில் இருக்கும் பல கவிதைகள் அந்த பதிவில் இருந்தாலும் நீங்கள் அவற்றை அவரின் பதிவில் சென்றுதான் படிக்க வேண்டும்.
இன்னொரு பதிவு அது சிங்கள நகைச்சுவை திரைப்படமான “கொலம்ப சன்னிய” பற்றியது.
இலங்கையிலுள்ள குக்கிராமம் ஒன்றில் இயற்கை கடன் கழிக்கவென செல்லும் அந்தரே என்பவரிற்கு மிகவும் பெறுமதியான இரத்தினக்கல் ஒன்று கிடைக்கின்றது. அதை விற்று திடீர் பணக்காரராகும் அந்தரேயும் அவரது குடும்பத்தினரும் கொழும்பில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியொன்றில் வீடு வாங்கி அங்கு பண்ணும் ரகளைகளே படத்தின் சாராம்சம்.
இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்திடம் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கு அந்த இரத்தினத்தை விற்று அவர்கள் தந்த காசோலையை 'உந்த கடதாசி எனக்கு வேண்டாம்' என்று தொகையை பணமாகவே பெற்று பணத்தை தலையணை உறையொன்றுக்குள் வாங்கிக்கொண்ட அந்தரே, தனது மகன், மகள், வயதான சகோதரி (கிழவி) மற்றும் தனது நெருங்கிய உறவினர் யாக்கோலிஸ் சகிதம் வெள்ளைக்காரர்கள் வசிக்கும் பகுதியொன்றில் குடியேறுகிறார்.
அந்த ஆடம்பரவீட்டில் மலசலகூட கொமெட்டில் உடுப்பு தோய்க்க முயற்சிப்பதிலிருந்து ரகளை ஆரம்பமாகிறது. அதன் பின்னர் ஒரே சிரிப்புத்தான். ஷவரில் குளித்து அலுத்துப்போய் கிராமத்தில் கிணற்றில் குளிக்கும் அனுபவத்தைப்பெற கிணறு ஒன்றை தோண்டுகின்றனர். யாக்கோலிஸ் அதற்கு நாளும் இடமும் பார்த்துச்சொல்ல குறிப்பிட்ட சுபநாளில் கிணறு தோண்டப்படுகிறது. சில அடிகள் தோண்டியதுமே தண்ணீர் பீரிட்டுக்கொண்டுவர எல்லோரும் மகிழ்ச்சியில் ஆரவாரித்து யாக்கோலிஸை பாராட்டுகிறார்கள். பக்கத்து வீட்டில் ஷவரில் குளித்துக்கொண்டிருந்த வெள்ளைக்காரர் ஒருவர் திடீரென்று தண்ணீர் வராமல் போகவே வெளியில் வந்து பார்த்து தலையிலடித்துக் கொள்கிறார். இவர்கள் கிணறு வெட்டியது அவர்களின் பைப் லைனில்..!!
கொழும்பு நாகரிகம் மற்றும் ஆங்கிலம் என்பவற்றை மகளிற்கு போதிப்பதற்காக வாத்தியார் ஒருவரை ஒழுங்கு செய்கிறார் ஆச்சி. வாத்தியார் முதல் பாடமாக நேர் கோடு ஒன்று கீறி தலையில் புத்தகத்தை விழாமல் வைத்தவாறு ஆச்சிக்கும் மகளுக்கும் பூனை நடை (cat walk) பயிற்றுவிக்கிறார் ! .
இரசனை மிகுந்த பாடல்களை கேட்க எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் ஒரு கோர்வையாக, கேட்பவையெல்லாம் பிடித்துப் போகுவையாக கேட்க யாருக்கும் முடிவதில்லை. ஒன்று அவை கேட்க கிடைப்பதில்லை. கிடைத்தால் நேரம் இருப்பதில்லை. தீடிரென்று பல தேடி கொண்டிருந்த பாடல்களை கொத்தாக குலையாக யாரும் கேளுங்கள் என்று முன்னால் நீட்டினால் எப்படி இருக்கும். அந்த வேலையை கானாப் பிரபா தான் செய்து வந்தார் வருகின்றார். இப்போது கோகுலனும் ஒளிப்பதிவுகளுடனும், பல மொழிகளிலும்....
கோகுலனுடைய வலைப்பூவுக்குள் நீங்கள் நுழையும் வரை அவரின் “முதலும் கடைசியுமான மரதன் ஓட்டம்” என்ற பதிவில் இருக்கும் இந்த பந்தியை வாசித்த படியே அவரது சுட்டியை இணையத்தில் தட்டச்சிடுங்கள்.
ஒரு ஐநூறு அறுநூறு மீற்றர் ஓடியதும்தான் தெரிந்தது இது எவ்வளவு பெரிய வில்லங்கமான ஓட்டம் என்று. இதயம் துடிக்கிற ஓசை எனக்கே கேட்டது. நாக்கு வறண்டது ஓடி முடிப்பது சிம்மசொப்பனமாகப்பட்டது. சுற்றிவர எழுமாற்றாக வெளிச்சப்பொட்டுக்கள் தோன்றுவது போலிருந்தது. ஆனாலும் வழியின் இருமருங்கும் மற்றும் மதிலுக்கு மேலாலும் தெரிந்த தலைகளில் இளம் பெண்களும் இருந்ததால் ஹைப்போதொலமஸ் மற்றும் இன்னபிற ஓமோன்களின் ஆதரவுடன் தொடர்ந்து ஓடினேன்.
வழியில் பார்வையாளர்கள் வாளிகளில் தண்ணீர் வைத்திருந்து தலையிலும் உடம்பிலும் ஊற்றியது மிகுந்த பெருமையாகவும் தெம்பாகவும் இருந்தது. களைப்பை போக்க கத்திக்கொண்டு வேறு ஓடினார்கள். ஆட்களை முந்தி செல்லும்போது 'வ்வோவ்...' என்று கூச்சலிட்டுக்கொண்டே சென்றார்கள். எதிராளியை நிலைகுலைய வைப்பதற்கு இதுவும் ஒரு உத்தி. மகாபாரதத்தில் அர்ச்சுனனின் கொடியில் இருந்து கொண்டு அனுமர் தனது சத்தத்தாலேயே கனபேரை போட்டுத்தள்ளினார் என்று படித்திருக்கிறேன். என்னைக்கடந்து கன 'வ்வோவ்...' கள் சென்றது வயிற்றைக்கலக்கியது.
ஓட்டம் பிறவுண்வீதியால் கலட்டி சந்தியை அடைந்தபோது ஓடினவர்களில் பலர் நடக்கத்தொடங்கியிருந்தார்கள். சிலர் காலை நொண்டிக்கொண்டும் முகத்தை வெட்கத்தால் மறைத்தவாறும் அவ்வப்போது தோன்றி மறைந்த அம்புலன்ஸ்களினுள் ஏறிப்படுத்துக்கொண்டார்கள். எப்பிடியிருந்த நான் இப்பிடியாகிட்டேனே என்ற நிலையில் ஓடிக்கொண்டிருந்த நானும் அம்புலன்ஸ் நப்பாசைகளால் ஈர்க்கப்பட்டாலும் பின்னர் வகுப்பில் நடக்கப்போகும் நக்கல் நளினங்களை நினைத்து கால்களில் இலக்ரிக் அமிலம் சுரந்து இறுகிவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு ஓடிக்கொண்டிருந்தேன்.
http://koculan.blogspot.com/

0 comments:
Post a Comment