ஞாயிறு தினக்குரல் வலைப்பதிவு அறிமுகம் - பாவையின் SKETH

கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து sketh என்ற பெயரில் பாவை எழுதி வரும் இந்த வலைப்பதிவில் அதிக இடுகைகள் இல்லைத்தான் என்றாலும், அனேக இடுகைகளில் அவதானிக்க கூடிய ஒன்றுள்ளது. இலங்கையின் கடந்த 30 வருடங்களில் எங்கள் எல்லோருக்கும் “மிக சாதாரணமாக” போய் விட்ட விசயங்களில் இன்னமும் அவருக்கு உயிர்ப்பு இருக்கிறது. அதற்கு உதாரணமாக இந்த வருடத்தின் முதலாம் நாள் அவர் “என்ன இது” என்ற தலைப்பில் இட்ட இடுகையை சொல்லலாம். தனக்கு பிடித்த ஓரிரு கவிதைகள், அவரது அனுபவங்கள் தவிர மற்ற அனைத்தும் நாங்கள் அனைவரும் அல்லது இலங்கையில் பலரும் பேசத் தயங்கும் விடயங்களை எள்ளல் நடையில் எழுத முடிந்திருக்கின்றது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு “புத்த பிக்குவோடு ஒரு நாள்” என்ற இடுகையை வாசித்து இருந்தேன். வலைப்பதிவில் எழுதும் அனேகரின் பல பதிவுகளை நாளாந்தம் படித்தாலும் மனதில் தாங்குபவை சிலதான். அந்த வகையில் இந்த பதிவில் எனது மனதில் பதிந்திருந்தது. ஏனென்றால் எனக்கு அதில் சொல்லியிருந்த விசயங்கள் புதுசுதான். பேருந்துந்தில் மதகுருமார்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில், புத்த பிக்குக்கு ஒருவருக்கு பக்கத்தில் இருந்தது சக பயணிகளால் அவர் இருக்கையை விட்டு எழுப்பபடுவதையும் எழுதும் அந்த பதிவு இப்படி முடிகின்றது.

அதற்குப் பிறகு நண்பர்கள் சொன்னார்கள், பிக்குவுக்குப் பக்கத்தில பெண்கள் யாரும் இருக்கக் கூடாதாம்.. ஆண்கள் வேணுமென்றால் இருக்கலாமாம் என்று. எனக்கெண்டா இது ஏனென்று புரியவேயில்லை. பெண்கள் பக்கத்தில் இருந்தால் அவர்கள் பிக்குகளாக இருப்பதன் புனிதம் கெட்டுப் போய் விடுமோ?

நாளாந்தம் பதிவுகளை இடும் பதிவர்கள் மத்தியில் 2006 ஆம் ஆண்டு இரண்டே இரண்டு இடுகைகளை இட்டு இருக்கின்றார். இரண்டும் மிக முக்கியமான இடுகைகள். “கேட்டாரே ஒரு கேள்வி” என்ற பதிவில் விடுதலைப்புலிகளின் பிடியில் இருக்கும் படைவீரனான தனது கணவனை விடுக்க கோரும் சிங்களப் பெண்மணி இறுதியில் இப்படி ஒரு வசனத்தை தொலைக்காட்சியில் கூறுகின்றார்.
பாதுகாப்புச் செயலரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாஜ ராஜபக்ஸ மயிரிழையில் உயிர் தப்பியதற்கு அவர்கள் எந்தளவு சந்தோஷப்பட்டார்கள் என்பதை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.... என் கணவர் விடுதலையானால் நானும் என் குடும்பமும் சந்தோஷப்படுவோமே..." என்று... தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறார்கள் இல்லையே என்ற ஆதங்கத்துடன் அந்தப் பெண்மணி இப்படிக் கேட்டார்,..

இன்னொரு பதிவு முந்நூறா நூற்றுமுப்பது தானா? என்னும் பதிவும் சம்பள அதிகரிப்பு கேட்டு போராடும் மலையக தோட்டத் தொழிலாளர்களும் அதை மறைத்து தமது அமைச்சு பதவிகளை தக்க வைக்க கதை சொல்லும் அரசியல் வாதிகளை பற்றியது.

இன்னொரு பதிவும் இருக்கிறது. “மரணம் வலி தருமா? என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் அந்த இடுகையில் இவரது வேறு இடுகைகளில் எங்குமில்லாதவாறு செழுமையான சொற்களால் எழுதப்பட்டிருக்கின்றது. மரண வீடுகளை தவிர்க்க விரும்பும் அல்லது மரண செய்திகளுக்கு போலி அனுதாபம் காட்ட விரும்பதவர்கள் நம் மத்தியில் இருந்தாலும் சமூகம் அவர்களின் அனுதாபத்தை வலிந்து கேட்கின்றது எதிர்பார்க்கின்றது. அது தொடர்பாக அவர் எழுதியிருக்கு இடுகை இப்படி இருக்கின்றது.
சமீப காலமாக ஒரே மரணச் செய்திகள்.. மரணம் மலிந்து விட்ட நாட்டில் இருந்து கொண்டு குடும்பத்தில், உறவினர்களில் பலரையும் இழந்து பழக்கமாகி போன நிலையில் இப்போதெல்லாம் எந்தவொரு உயிரிழப்பும் என்னைப் பாதிப்பதில்லை.. கேட்ட நிமிடத்தில் ஏற்படும் அந்த ஒரு உணர்வைத் தவிர வேறு உணர்வுகளற்ற மரக்கட்டையாகி போனேனோ என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இன்றைய மரணம், இல்லை இன்னமும் உணர்வுள்ளவளாக இருக்கிறாயென்று உணர்த்தியது..

சமீப காலமாக மரணத்திற்காக கவலைப்படுபவர்களாக காட்டிக் கொள்பவர்கள், துக்கம் விசாரிப்பவர்கள், என்ன நடந்தது என்று ஆதியோடந்தமாக கேட்டுக் கொள்பவர்கள், என்று யாரைப் பார்த்தாலும் ஒரு விதமான எரிச்சலே வருகிறது..

ஒரு மாதம் இருக்கும்.. அப்பாவின் சகோதரி(மாமி) இறந்து விட்டதாக யாழ்பாணத்திலிருந்து அழைப்பு வந்தது.. காலை வேளையில் வரும் தொலைபேசி அழைப்புக்கள் இந்த மாதிரியான செய்திகளையே கொண்டு வரும் என்று தெரியும். அத்தோடு இரண்டு நாட்கள் முன்பாக அவர் இறக்க முதலே இறந்தாக வந்த செய்தி அவரின் இறப்பு நிச்சயம் என்று தெரிவித்திருந்தது.. ஆகவே தொலைபேசி அடிக்கும் போது அண்மையில் இருந்தும் அம்மா எடுக்கட்டும் என்று பேசாமல் இருந்தேன்..

மரணத்தின் மீது கொண்ட பயத்தாலல்ல.. செய்தியை சொல்பவருடன் அது பற்றி கதைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காகவே... சொந்தங்களுடன் அவ்வளவாக நெருங்கிப் பழகாத குணம் என் குடும்பத்தவர்க்கு இருந்த போதும் மாமி குடும்பத்தோடு ஒட்டுறவாகவே என்றும் இருந்து வந்தோம். அருமையான ஒரு பெண்மணி.. எந்த ஒருவரும் அவரைக் குறை சொல்லி நான் அறிந்ததில்லை.. எல்லோருடனும் நல்லுறவைப் பேணி வந்தவர் அவர்..

மீண்டும் ஒரு மரணம்... என்னைத் தன் மாதிரியாக(Model) நினைக்கும் என்னை விட இரண்டு வயது குறைந்த தோழியின் அப்பா... சிறு வயதில் எங்களுடன் கிரிக்கெட், கரம், காட்ஸ், செஸ் என எல்வாவற்றிலும் சேர்ந்து கொள்வார்.. அந்த காலத்தில் தன் பிள்ளையைப் போலவே என்னையும் நடத்தியவர்.. அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து தொலைபேசி மூலம் ஒரு காலை நேரத்தில் தெரிய வந்தது.. அந்த நேரம் அம்மா சமையல் வேலையில் இருக்க நானே அழைப்பை எடுக்க வேண்டியதாக போயிற்று.. செய்தியை என்னிடம் சொல்ல எதுவுமே கூறாது அம்மாவிடம் கொடுத்து விட்டு செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தேன்..

பரீட்சைக்காக விடுமுறை எடுத்திருந்த வாரத்தில் என் மேலாளரின் தகப்பானாரின் மறைவு.. 95 வயது வரை நன்றாக இருந்தவர்.. கடைசி நிமிடத்திலும் நன்றாகவே இருந்தாராம்... மரண வீட்டிற்கு செல்லவில்லை.. உண்மையைச் சொன்னால் எனக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணமே கிடையாது.. 95 வயது வரை வாழ்ந்தவர் இன்னமும் வாழ்ந்திருக்கலாமேயென்ற என் துக்கத்தை பகிர்ந்து கொள்ளவா போகப் போகிறேன்..

சம்பிரதாயத்துக்காகத் தானே.. சம்பிரதாயத்தக்காக எதையும் செய்ய வேண்டிய கடப்பாடு எனக்கு இல்லை என்ற நினைப்போடு இருந்த போதும் அவர் மீண்டும் வேலைத்தளம் வரும்போது எவ்வாறு எதிர்கொள்வது என்ற குழப்பம் நேரிட நண்பியைக் கேட்டேன்.. ஆறுதல் தெரிவித்து அயடை அனுப்பி விடு என்றாள்.. ஆறுதல் சொல்ல வேண்டுமென்ற எண்ணமும் இல்லை என்று அவளுடன் விவாதித்தேன்.. மற்றவர்கள் சென்று வந்திருந்த நிலையில் அயடை தானே, அனுப்பி விடு, இல்லாவிடில் நேரில் வரும் போது எதிர் கொள்ள கஷ்டம் என்ற அவளது ஆலோசனையின் நிமித்தம் அயடை அனுப்பினேன்..

மீண்டும் என் நண்பியின் அப்பாவின் மரணம்.. வேலை நேரத்தில் செல்ல வேண்டி ஏற்பட்டதால், காரணத்தை சொல்லி அனுமதி கோரினேன்.. அவரின் மனதில் எப்படியும் இவள் தனது வீட்டு நிகழ்வுக்கு வரவில்லை என்ற நினைப்பு வந்திருக்கும் தானே... இது போன்ற சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காகத் தான் போயிருக்க வேண்டுமோ என்ற அந்த நிமிடத்தில் ஏற்பட்டது.

சரி.. நான் தான் எதற்காக மரண வீட்டிற்கு செல்கிறேன்.. உண்மையாக எனக்குள் கவலை இருக்கிறதா? நண்பி தகப்பனை இழந்து விட்டாள் என்ற வருத்தத்தை தவிர வேறு என்ன கவலை எனக்கு.. நான் போவது அவளுக்க உண்மையாகவே ஆறுதலை அளிக்குமா?

மரண வீட்டில் இருப்பவர்கள் எதற்காக அழுகிறார்கள்? சென்ற உயிருக்காகவா? இல்லை குறிப்பிட்ட அந்த உறவு இல்லாமல் இனி என்ன செய்யப் போகுறோம் என்பதற்காகவா? இப்படி யோசிப்பது பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும் மரண வீட்டில் வைத்து என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை..


உறவுகளின் மரணம் பற்றிய பாதிப்பு இல்லாதபோதும் ஒரு சில மரணங்கள் ரொம்பவும் பாதிக்கின்றன.. அந்த மரணம் கூட எதற்காக என்னைப் பாதிக்கிறது.. போராட்டத்தில் ஒரு ஈடு செய்ய முடியாத அங்கத்தவரை இழந்து விட்டோம் என்பதற்காகவா என்று கேட்டால் ஆம் அதுவும் தான்... ஆனால் அது மட்டுமல்ல...

இன்று வேலைத்தளத்தில் இருந்த போது அம்மாவின் தொலைபேசி அழைப்பு..

net இல் news பார்த்தியா?

இல்லை ஏன்?

கேட்டனான்.. - அம்மாவின் குரல் சரியாக இல்லை

என்னாச்சு, சொல்லங்கோவன்..

குண்டுத் தாக்குதலாம்..

எங்க கொழும்பிலயோ..

இல்லை கிளிநொச்சியில்.. அழைப்பு துண்டிக்கப்பட்டது..


என்ன இது.. நெடுகத்தானே கிளிநொச்சியில போடுறாங்க.. இவ என் இப்படி பதட்டப்படுகிறா.. (என்ன ஒரு நினைப்பு.. அடிக்கடி போட்டால் அடிக்கடி மரணச் செய்திகள் கேட்டால் அந்த மரணங்களில் இழப்பு புரிந்து கொள்ளப்படாத நிலை) யோசிச்சுக் கொண்டே செய்தியைப் பார்த்தேன்.. எதிர்பார்க்காத செய்தி.. அம்மாவின் பதட்டத்திற்கான காரணம் புரிந்தது..

என்று தொடரும் அந்த இடுகையின் மிகுதியை அவரது பதிவில் வாசியுங்கள். ஓரிரண்டு இடுகை தவிர பாவையின் அனைத்து இடுகைளும் வாசிக்கப்பட வேண்டியவையே.

0 comments: