ஞாயிறு தினக்குரல் வலைப்பதிவு அறிமுகம் -மதி கந்தசாமி தரும் தமிழ் வலைப்பதிவு

“இணையத்தில் எனக்கென்றொரு பக்கம்” காண்பது இப்போது இலகுவான காரியம்தான். ஆனால் இணையத்தமிழ் அரிதானதாயும், பரிசோதனைக் காலத்திலும் இருந்த போது தனக்கென்று பக்கம் கண்டவர்தான் மதி கந்தசாமி. இன்னும் சொன்னால், ஈழத்தவரில் முதல் முதல் வலைப்பதிவை தமிழில் எழுதியவர் இவரே. முதன் முதலில் தமிழ் வலைப்பதிவுகளை ஓரிடத்தில் பட்டியலிட்டு, பட்டியல் வழி அதையடையும் வண்ணம் இன்னொரு பக்கம் ஆரம்பித்து, இன்று தமிழ் இணையவுலகில் பிரபல்யம் வாய்ந்த தமிழ்மணம் வலைப்பதிவு திரட்டி ஆரம்பிக்கப்பட்ட போது அதில் இணைந்திருந்திருந்தவர். மூத்த வலைப்பதிவர் என்ற தகுதி வந்த பின்னும் சிறிதளவும் ஓயாமல் இப்போதும் தரம் மிகு இடுகைகள் எழுதிக்கொண்டே இருக்கிறார்.

இணையமும் அதனுடானான தனது அனுபவமும் அவரது வரிகளின் இப்படி இருக்கின்றது.

இணையத்தமிழ் 1999-ஆம் ஆண்டு அறிமுமாகியிருந்தாலும் தமிழ் இணையத்தினுள் நான் நுழைந்தது 2001-இல். விகடன்.காமில் ‘கோணல் பக்கங்கள்’ எழுதிக்கொண்டிருந்த சாரு நிவேதிதாவுடன் விவாதிப்பதற்காகத் தொடங்கப்பட்ட யாகூ குழுமத்தில் சேர்ந்தேன். 2001 செப்டம்பர் 4-இல் நண்பர்கள் சிலருடன் ‘மரத்தடி’ யாகூ குழுமத்தைத் தொடங்கி குழுமத்தின் உரிமையாளர் மற்றும் மட்டுறுத்துனராக 2005 ஜனவரி வரை இருந்தேன். இந்தக் காலகட்டத்தில் கற்றுக்கொண்டது நிறைய. சந்தித்த நண்பர்களும் ஏராளம்.

தமிழ்வலைப்பதிவுகள் 2003இல் பிரபலமாகத் தொடங்கின. 2003 மே மாதம் ப்ளொக்-ஸ்பாட்டில் இரண்டு வலைப்பதிவுகளைத் தொடங்கினேன். ஜூன் 2003-இல் தமிழ்வலைப்பதிவுகளை ஓரிடத்தில் பட்டியலிடுவதற்காக http://tamilblogs.blogspot.com என்னும் வலைப்பதிவை தொடங்கினேன். தமிழ் வலைப்பதிவு பட்டியல் அது
. ஜூலை 2003இல் வலைப்பூ என்னும் வலைப்பதிவைத் தொடங்கினேன். வலைப்பூ வலைப்பதிவு, ப்ளொக்-ஸ்பாட்டில் .நெட்-க்கு நகர்ந்தது. அங்கிருந்து தமிழ்மணம் தொடங்கப்பட்டபோது நட்சத்திரமாக உருமாறியது

யாகூ குழுமத்தினூடாக தமிழ் இணையத்தில் நுழைந்த நான், வலைப்பதிவுகளில் ஆர்வத்துடன் ஈடுபட முக்கிய காரணம் வலைப்பதிவுகளின் கட்டற்ற சுதந்திரத் தன்மை. வலைப்பதிவுகள் வருவதற்கு முன்பிருந்த கட்டுப்பாடுகள், வலைப்பதிவுகளின் வருகைக்குப்பிறகு தளர்ந்துபோயின. பல விதமான குரல்கள், எவ்வித கட்டுப்பாடுமின்றி இணையத்தில் ஒலிக்கத் தொடங்கின. இம்மாதிரியான சுதந்திர ஊடகம் மக்களிடையே பிரபலம் ஆவதற்கு ஆரம்பத்தில் சில முன்னெடுப்புகள் தேவையாயிருந்தன. அம்மட்டில் அணில்போல சிலவற்றைச் செய்திருப்பதில் திருப்தி. ஆயினும் நாம் செல்லவேண்டிய தூரம் நீண்டது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விதயம்.
பிடித்த விதயங்கள் என்று பார்த்தால்: எதுதான் பிடிக்காது என்று சொல்லவேண்டும். எதையும் ஒரு முறை முயற்சி செய்துபார்த்துவிடும் குணம் என்னுடையது.

“தினக்குரலின்” வலைப்பூக்கள் பக்கத்திற்காக இவருடைய வலைப்பதிவை வாசிக்கத் தொடங்கிய தொடங்கிய போது 2003 ஆம் ஆண்டில் இருந்து எழுதி வரும் இவரின் பதிவில் எதை வாசிப்பது, எதை விடுவது என்ற குழப்பம் வேறு இருந்தது. இதை தவிர்த்து விடலாம் என்ற சொல்லக் கூடிய இடுகை எதுவும் இல்லை. அதே போல எல்லாமே தீவிர இலக்கியத்தையோ, அரசியலையோ பேசுபவை அல்ல. ஜனரஞ்ச நடையில் மெல்ல விரியும் அவரது அனுபவ எழுத்துக்கள், சொகுசு இருக்கையில் இருத்தி, பள்ளங்கள் தவிர்த்து அலுங்காமல் குலுங்காமல் நமை கொண்டு சேர்க்கும் சாரதி போன்றது. அது ஒரு இனிய பயணமாக அமைந்திருந்தால் அந்த நினைவுகள் மனதில் தங்கிவிடுவதும் உண்டு. அப்படியே இவரது அனுபவங்கள் எனக்குள்ளும் தங்கி விட்டிருக்கின்றது. உதாரணமாக இனிமேல் நானும் கனடா போக நேர்ந்தால் சாலைகளில் வாகனங்களை விபத்துக்குள்ளாக்கும் பனிக்காலம் பற்றிய அவதானமாய் இருக்க அது சொல்கின்றது.

ஒரு வலைப்பதிவை வைத்துக்கொண்டு பதிவிட நேரமில்லை என்பவர்கள் மத்தியில் திரைப்படங்கள் பற்றிய பார்வைக்கென்று ‘திரைப்பார்வை’ என்னும் பெயரிலொன்றும், புத்தகங்கள் பற்றிய பார்வைக்கு ‘புத்தக வாசம்’ என்றொன்றும், சமையல் பற்றிய எழுத ஆங்கிலத்தில் விருந்து என்றொரு பதிவும், ஆங்கிலத்தில் மற்றொரு பதிவுமென இவர் அசத்துகின்றார். சிற்றிதழ்கள், தீவிர இலக்கியம் பேசும் இணையங்கள் எங்கணும் காணக்கூடிய அரிய கட்டுரைகளையும், பேட்டிகளையும் மழை காலத்தை எதிர்நோக்கும் ஒரு எறும்பு போன்று சேர்த்து வைத்து, பின்னூட்டங்கள் வழி விவதாங்களும் நடந்தேறியிருக்கின்றது.

இணைய வசதி கொண்ட நிலமொன்றில் நீங்கள் தனித்திருக்க நேர்ந்தாலும், தனிமை போக்கி, வெளி உலகம் கண்டு, நேரத்தை அறிவின் முதலீடாய் மாற்ற இவரது பதிவுகள் துணை நிற்கும் என்பதை நீங்கள் வாசிக்கும் போது உணர்வீர்கள்.

1 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

//இணைய வசதி கொண்ட நிலமொன்றில் நீங்கள் தனித்திருக்க நேர்ந்தாலும், தனிமை போக்கி, வெளி உலகம் கண்டு, நேரத்தை அறிவின் முதலீடாய் மாற்ற இவரது பதிவுகள் துணை நிற்கும் என்பதை நீங்கள் வாசிக்கும் போது உணர்வீர்கள்.
//

நிச்சயமாக!