ஞாயிறு தினக்குரல் வலைப்பதிவு அறிமுகம் - சயந்தன் தரும் சாரல்.

குறிப்பிட்ட சில வருடங்களாக நல்ல பதிவுகளை எழுதி வரும் வலைப்பதிவர்கள், வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்த புறப்படுகையில் எந்த இடுகைகளை பற்றி சொல்வது என்ற குழம்ப வந்துவிடும். எல்லா இடுகைகளுமே சுட்டிக் காட்டப்பட வேண்டியவை தானோ என்று எண்ணத் தோன்றுபடியான பல இடுகைகளை நாங்கள் அவற்றில் காண நேரும். ஈற்றில் அரும் பெரும் ஜோதியின் அடி முடி அறிப் புறப்பட்ட போல கடந்த ஆண்டுடின் இடுகைகள் புரட்டி அவற்றில் கரைந்து போய்விட நேர்வதுண்டு. அப்படியான ஒரு வலைப்பதிவாக சயந்தனின் "சாரல்" வலைப்பதிவை சொல்லலாம்.

கடந்த நான்கு வருடமாக "சாரல்" வலைப்பதிவில் எழுதிவரும் இவர் ஆரம்பத்தில் "தினக்குரலில்" சிறுகதைகளையும், செய்திக்கட்டுரைகளையும் எழுதிவந்தவர். இவர் சுவிசுக்கு புலம்பெயர்ந்ததன் பின்னான காலங்கள் அச்சு ஊடகங்களில் இருந்து தூரமாகிப் போனதால் வலைப்பதிவிலே தற்போது அதிகம் எழுதுபவர். வலைப்பதிவில் ஒலி, ஒளிப்பதிவுகளை இடுவதில் ஆர்வம் மிக்கவர். பரிசோதனை முயற்சிகள் செய்வது இவருக்கு பிடித்தமானதே. சமயத்தில் அங்கத சொற்களை உதிர்க்கையில் நவீன காளமேகமென தோற்றம் காட்டுவதும் ரசிக்கக் கூடியதொன்றுதான்.

சில பதிவுகளை ஒரு நகைச்சுவை நாடகம் பார்ப்பது போல போலவும், இன்னும் சில பதிவுகளை கதிரையின் நுனியில் இருந்தும் வாசிக்க வைப்பவர். "என்ர மனுசியும் ரைவிங் பழக வேணும்" என்ற பதிவு சிரித்துக் கொண்டு வாசிக்க வைத்து பின்னர் சிந்திக்க தூண்டுவது. வலையுலகத்தின் ஓட்டம் பார்த்தும், அதே வேளை மிகவும் பொருத்திப் போகும் தரம் மிகுந்த பதிவுகளை இவர் ஈடுவார் என்பதற்கு இவரது "ஸ்ரீ லங்கா பாஸ்போட்" என்னும் கதையை சொல்வது பொருத்தமானது. வலைப்பதிவில் ஒரு காலத்தில் சூடான சொல்லாக இருந்த ஸ்ரீ லங்கா பாஸ்போட்டை பெறுவதற்காக ஒருவன் படும் கஸ்ரம் என்பதை புரியவைக்கும் அருமையான கதை.

காலங்களில் சூழ்ச்சி வேகத்தில் மறந்துவிட்ட மனிதர்களாய், நாம் என்றுமே சிந்தித்திராத பக்கமொன்றை பேசும் இன்னொரு சிறுகதை "அனாதைகள்" சமாதான உடன்படிக்கையின் நிமித்தம் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பும் தங்களின் தரப்பு கைதிகளை பரிமாறிக் கொள்ள அப்பாவிகள் இன்றும் சிறையில் வாடுதல் குறித்து வருத்தியிரார். யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே விடுதலை செய்யப்பட்டு விட, தன் எதிர்காலம் குறித்த நம்பிக்கையோடு தலைநகர் வரும் இளைஞன் தன் நிகழ்காலத்தையும் சேர்த்து இழக்கும் உருக வைக்கும் கதை. தன் காதலி தன்னை எதிர்பார்த்து எதிர்ப்பார்த்து....இறுதியில் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டாள் என்பதை நெழ்ச்சி மிகு வார்த்தைகளால் வனைபவர்.

காலக்கண்ணாடியிருத்தலை தவிர்த்து கற்பனை குதிரைகளை கதைகள் தட்டிவிடும் குணமற்றது இவரது படைப்புக்கள். பனம்பழம் விழம் சத்தத்தை தவிர வேறு அறியாக் கிராமங்களில் பல எடை குண்டுகள் விழுந்து வெடிக்கும் வாழ்க்கை எப்படி எங்களுக்கு அறிமுகமானது என்பது முதல் தான் தாயகம் விட்டு வெளியேறும் வரையான தனது நினைவுப்பதிவுகளை " நினைவழியா நாட்கள்" என்ற பெயரில் இவர் எழுதும் தொடர் பதிவு அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. எறிகணைகள் விழுந்து வெடிக்கும் நாட்கள் அறிமுகமானதை இவரது வரிகளில் இப்படியெழுதுகின்றார்.

´´மருமோள் தம்பி எங்கை´´ அம்மம்மா நடுங்கும் குரலில் கேட்டவ பதிலை எதிர்பாராமல் உட்சென்று படுத்துக் கிடந்தவனை பாயோடு சுருட்டி தரதரவென்று இழுத்துவந்து முற்றத்தில் போட்டா. ´´மருமோள் தலைக்கு மேலை வெடிச்சு வெடிச்சுப் போகுது. என்ன கோதாரியோ தெரியேல்ல. உங்கை கிட்டடியளிலதான் விழுகுது.´´ அம்மம்மா ஆர்ப்பாட்டங்களில் அணைந்து போயிருந்த மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினா. அம்மா நிலத்தில் வளர்த்தியிருந்த மகளைத் தூக்கி பாயில் வளர்த்தி தலையணை வைத்து விட்டா. மகன் எழும்பி சப்பாணி கட்டி முழிச்சிருந்தான். இந்தச் சத்தங்களும் இரைச்சல்களும் சாவினை ஏற்படுத்தி விடும் என்பதனையும் சாவு அச்சந்தரக்கூடியது என்பதனையும் அந்த ஆறு வயதுகளில் அவன் அறிந்திருந்தான்.

சாதிகள் எம் சமூகத்தில் எப்படியான கட்டமைப்புக்களில் இருந்தது என்று ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதாமல் நினைவழியா நாட்கள் தொடரின் "அப்பையண்ணை" என்ற பகுதியில் வரும் இரு பந்திகளை பாருங்கள்.

மலரக்காக்கு என்னை விட கொஞ்சம் வயசு மூத்த மகனொருவன் செல்வன் எண்டு இருந்தான். அவன் எங்கடை வீட்டை வரும் போதெல்லாம் சாப்பிட்டுவிட்டும் போவான். ஆனால் வீட்டை சொல்ல வேண்டாம் எண்டு மட்டும் சொல்லுவான். மலரக்கா வந்தால் மட்டும் தான் தம்பி ஓடிப்போய் சோடா வாங்கியாடா எண்டு அம்மா என்னைக் கலைப்பா. எனக்கு அதில் வருத்தமோ கவலையோ இல்லை. ஏனென்றால் மிஞ்சுற சோடா எனக்குத்தானே.

அப்பையாண்ணை திரும்பி வந்தார். நான் சைக்கிளில் ஏறிய பிறகு ஒரு உந்தில் எந்த வித நிலை குலைவும் இல்லாமல் சைக்கிளை ஓட்டத்தொடங்கினார். நான் அமைதியாக இருந்தேன். மனதிற்குள் செல்வமண்ணை, ஐயா, நான் மூவரையும் ஒரு வரிசையில் நிறுத்தினேன். செல்வமண்ணைக்கு யாரும் மூக்குப் பேணியில் தேத்தண்ணி கொடுக்கப் போவதில்லை. எனக்கு செல்வமண்ணையின்ர அம்மா மூக்குப் பேணியில் தந்தாலும் ஐயாவின் அம்மா அப்படித்தரவில்லை. ஆனால்…. ஐயாக்கு ?
எங்கள் சமூகத்தின் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்றான சாதியக் கட்டமைப்பை இதை விட இலகு வரிகளில் விளங்க வைக்கும் அந்த பதிவும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்
.

சயந்தனின் பதிவுகளை பற்றியெழுதுகையில் அவற்றில் எதை பரிந்துரைப்பது என்பதை விட எதை பரிந்துரைகாமல் விடுவது என்னும் குழப்பமே எஞ்சுகின்றது. நான்கு வருடங்களில் அவர் எழுதியவற்றை நீங்கள் வாசிக்ககையில் அவற்றின் காலப் பெறுமதியை உணர்வீர்கள்.

ஞாயிறு தினக்குரல் வலைப்பதிவு அறிமுகம் - ஆ.கோகுலன்

ஆ.கோகுலன் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் தான் வலைப்பதிவுக்கு “சும்மா கொஞ்ச நேரம்” ஒதுக்கி வந்து, இப்போது அடுத்து ஆடும் ஒருவர். யாழ்ப்பாணத்து உரும்பிராயை சேர்ந்தவர் ஆனந்தராசா கோகுலன் என்னும் இவர் தற்போது பணி நிமித்தம் கொரியாவில் வசிப்பவர். அதிகம் எழுதமாலே, பிறரின் நேரத்தை பங்குபோடுவதை உணர்ந்தவர் போல வித்தியாசமாகதாகவும், விரும்பத்தக்கதாகவும் எழுதுபவர். சில விசயங்களில் ஒரு முனைவர் பட்டப்படிப்பு மாணவன் போல ஆராய்வது இவரது வழக்கமானது. இருந்தும் மிகவும் தன்னடக்கமாக





சரக்கில்லாமல் கண்டதையும் எழுத வேண்டாமே என்றுதான் வசதியாக “சும்மா கொஞ்ச நேரம்” என்று பெயர் வைத்துள்ளேன்” என்று மின்னஞ்சல் வழி பகிர்பவர்.





இவர் படம் பார்க்கிறார், பாட்டுக் கேட்கிறார், கவிதைகளையும் இன்ன பிறவையும் வாசிக்கின்றார் என்று வெறுமனே சொல்ல முடியாது. ஏனென்றால் ஒவ்வொன்றையும் 360 பாகை நோக்குடன் பிபிசி தமிழோசையில் போகும் பெட்டகச்செய்தி போல வட்டமடிப்பார். உதாரணமாக தனது நினைவில் நிற்கும் கவிதைகள் பற்றி “இம்சை இனிமை கவிதை” என்ற பெயரில் எழுதியிருக்கும் பதிவில் மகாகவியின் கவிதையில் இருந்து, யாழ்ப்பாணத்தில் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் வெளிவந்த சீரஞ்சீவி வாரமலரில் சின்னதாய் ஒரு மூலையில வெளிவந்த கவிதை வரைக்கும் ஞாபகம் வைத்து எழுதியிருக்கிறார்.
விருந்தாளி பையில் திராட்சை
நீண்ட நேரப் பேச்சு
உறங்கிப்போனது குழந்தை





இது கவிஞர் நா.விஸ்வநாதனின் கவிதை. எப்போது வாசித்தாலும் பட்டென்று ஒட்டிக்கொள்ள கூடிய வரிகளில் இருக்கும் பல கவிதைகள் அந்த பதிவில் இருந்தாலும் நீங்கள் அவற்றை அவரின் பதிவில் சென்றுதான் படிக்க வேண்டும்.

இன்னொரு பதிவு அது சிங்கள நகைச்சுவை திரைப்படமான “கொலம்ப சன்னிய” பற்றியது.





இலங்கையிலுள்ள குக்கிராமம் ஒன்றில் இயற்கை கடன் கழிக்கவென செல்லும் அந்தரே என்பவரிற்கு மிகவும் பெறுமதியான இரத்தினக்கல் ஒன்று கிடைக்கின்றது. அதை விற்று திடீர் பணக்காரராகும் அந்தரேயும் அவரது குடும்பத்தினரும் கொழும்பில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியொன்றில் வீடு வாங்கி அங்கு பண்ணும் ரகளைகளே படத்தின் சாராம்சம்.





என்று தொடங்கும் அந்த பதிவென ஒரு நகைச்சுவையான பதிவுதான். படத்தில் இருந்தவற்றை எழுத்தில் பிரதிபலித்த அந்த பதிவின் சிறு பகுதியை பாருங்கள்.




இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்திடம் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கு அந்த இரத்தினத்தை விற்று அவர்கள் தந்த காசோலையை 'உந்த கடதாசி எனக்கு வேண்டாம்' என்று தொகையை பணமாகவே பெற்று பணத்தை தலையணை உறையொன்றுக்குள் வாங்கிக்கொண்ட அந்தரே, தனது மகன், மகள், வயதான சகோதரி (கிழவி) மற்றும் தனது நெருங்கிய உறவினர் யாக்கோலிஸ் சகிதம் வெள்ளைக்காரர்கள் வசிக்கும் பகுதியொன்றில் குடியேறுகிறார்.

அந்த ஆடம்பரவீட்டில் மலசலகூட கொமெட்டில் உடுப்பு தோய்க்க முயற்சிப்பதிலிருந்து ரகளை ஆரம்பமாகிறது. அதன் பின்னர் ஒரே சிரிப்புத்தான். ஷவரில் குளித்து அலுத்துப்போய் கிராமத்தில் கிணற்றில் குளிக்கும் அனுபவத்தைப்பெற கிணறு ஒன்றை தோண்டுகின்றனர். யாக்கோலிஸ் அதற்கு நாளும் இடமும் பார்த்துச்சொல்ல குறிப்பிட்ட சுபநாளில் கிணறு தோண்டப்படுகிறது. சில அடிகள் தோண்டியதுமே தண்ணீர் பீரிட்டுக்கொண்டுவர எல்லோரும் மகிழ்ச்சியில் ஆரவாரித்து யாக்கோலிஸை பாராட்டுகிறார்கள். பக்கத்து வீட்டில் ஷவரில் குளித்துக்கொண்டிருந்த வெள்ளைக்காரர் ஒருவர் திடீரென்று தண்ணீர் வராமல் போகவே வெளியில் வந்து பார்த்து தலையிலடித்துக் கொள்கிறார். இவர்கள் கிணறு வெட்டியது அவர்களின் பைப் லைனில்..!!

கொழும்பு நாகரிகம் மற்றும் ஆங்கிலம் என்பவற்றை மகளிற்கு போதிப்பதற்காக வாத்தியார் ஒருவரை ஒழுங்கு செய்கிறார் ஆச்சி. வாத்தியார் முதல் பாடமாக நேர் கோடு ஒன்று கீறி தலையில் புத்தகத்தை விழாமல் வைத்தவாறு ஆச்சிக்கும் மகளுக்கும் பூனை நடை (cat walk) பயிற்றுவிக்கிறார் ! .





நனவிடை தோய்தல் என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றுதான். உண்மையில் அதுதான் சுவாரசியம் மிக்க பதிவுகளாகவும் இருக்கும். இவருடைய வலைப்பூவிலும் “தேவாரமும் நானும்” “முதலும் கடைசியுமான மரதன் ஓட்டம்” என்னும் இரண்டு பதிவுகள் இருக்கின்றன. இந்த தலைப்புகளை வைத்துக்கொண்டு பலர் தங்கள் பால்ய காலத்து பசுமை நினைவுகளை மீட்டத் தொடங்கி விடுவார்கள். உங்கள் ஊருக்கு, உங்கள் ஒழுங்கைக்கு, உங்கள் சொந்த வீட்டுப் போன ஒரு சுகத்தை அந்த எழுத்தின் உணர்வீர்கள்.

இரசனை மிகுந்த பாடல்களை கேட்க எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் ஒரு கோர்வையாக, கேட்பவையெல்லாம் பிடித்துப் போகுவையாக கேட்க யாருக்கும் முடிவதில்லை. ஒன்று அவை கேட்க கிடைப்பதில்லை. கிடைத்தால் நேரம் இருப்பதில்லை. தீடிரென்று பல தேடி கொண்டிருந்த பாடல்களை கொத்தாக குலையாக யாரும் கேளுங்கள் என்று முன்னால் நீட்டினால் எப்படி இருக்கும். அந்த வேலையை கானாப் பிரபா தான் செய்து வந்தார் வருகின்றார். இப்போது கோகுலனும் ஒளிப்பதிவுகளுடனும், பல மொழிகளிலும்....




கோகுலனுடைய வலைப்பூவுக்குள் நீங்கள் நுழையும் வரை அவரின் “முதலும் கடைசியுமான மரதன் ஓட்டம்” என்ற பதிவில் இருக்கும் இந்த பந்தியை வாசித்த படியே அவரது சுட்டியை இணையத்தில் தட்டச்சிடுங்கள்.





ஒரு ஐநூறு அறுநூறு மீற்றர் ஓடியதும்தான் தெரிந்தது இது எவ்வளவு பெரிய வில்லங்கமான ஓட்டம் என்று. இதயம் துடிக்கிற ஓசை எனக்கே கேட்டது. நாக்கு வறண்டது ஓடி முடிப்பது சிம்மசொப்பனமாகப்பட்டது. சுற்றிவர எழுமாற்றாக வெளிச்சப்பொட்டுக்கள் தோன்றுவது போலிருந்தது. ஆனாலும் வழியின் இருமருங்கும் மற்றும் மதிலுக்கு மேலாலும் தெரிந்த தலைகளில் இளம் பெண்களும் இருந்ததால் ஹைப்போதொலமஸ் மற்றும் இன்னபிற ஓமோன்களின் ஆதரவுடன் தொடர்ந்து ஓடினேன்.

வழியில் பார்வையாளர்கள் வாளிகளில் தண்ணீர் வைத்திருந்து தலையிலும் உடம்பிலும் ஊற்றியது மிகுந்த பெருமையாகவும் தெம்பாகவும் இருந்தது. களைப்பை போக்க கத்திக்கொண்டு வேறு ஓடினார்கள். ஆட்களை முந்தி செல்லும்போது 'வ்வோவ்...' என்று கூச்சலிட்டுக்கொண்டே சென்றார்கள். எதிராளியை நிலைகுலைய வைப்பதற்கு இதுவும் ஒரு உத்தி. மகாபாரதத்தில் அர்ச்சுனனின் கொடியில் இருந்து கொண்டு அனுமர் தனது சத்தத்தாலேயே கனபேரை போட்டுத்தள்ளினார் என்று படித்திருக்கிறேன். என்னைக்கடந்து கன 'வ்வோவ்...' கள் சென்றது வயிற்றைக்கலக்கியது.


ஓட்டம் பிறவுண்வீதியால் கலட்டி சந்தியை அடைந்தபோது ஓடினவர்களில் பலர் நடக்கத்தொடங்கியிருந்தார்கள். சிலர் காலை நொண்டிக்கொண்டும் முகத்தை வெட்கத்தால் மறைத்தவாறும் அவ்வப்போது தோன்றி மறைந்த அம்புலன்ஸ்களினுள் ஏறிப்படுத்துக்கொண்டார்கள். எப்பிடியிருந்த நான் இப்பிடியாகிட்டேனே என்ற நிலையில் ஓடிக்கொண்டிருந்த நானும் அம்புலன்ஸ் நப்பாசைகளால் ஈர்க்கப்பட்டாலும் பின்னர் வகுப்பில் நடக்கப்போகும் நக்கல் நளினங்களை நினைத்து கால்களில் இலக்ரிக் அமிலம் சுரந்து இறுகிவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு ஓடிக்கொண்டிருந்தேன்.

http://koculan.blogspot.com/

ஞாயிறு தினக்குரல் வலைப்பதிவு அறிமுகம் -மதி கந்தசாமி தரும் தமிழ் வலைப்பதிவு

“இணையத்தில் எனக்கென்றொரு பக்கம்” காண்பது இப்போது இலகுவான காரியம்தான். ஆனால் இணையத்தமிழ் அரிதானதாயும், பரிசோதனைக் காலத்திலும் இருந்த போது தனக்கென்று பக்கம் கண்டவர்தான் மதி கந்தசாமி. இன்னும் சொன்னால், ஈழத்தவரில் முதல் முதல் வலைப்பதிவை தமிழில் எழுதியவர் இவரே. முதன் முதலில் தமிழ் வலைப்பதிவுகளை ஓரிடத்தில் பட்டியலிட்டு, பட்டியல் வழி அதையடையும் வண்ணம் இன்னொரு பக்கம் ஆரம்பித்து, இன்று தமிழ் இணையவுலகில் பிரபல்யம் வாய்ந்த தமிழ்மணம் வலைப்பதிவு திரட்டி ஆரம்பிக்கப்பட்ட போது அதில் இணைந்திருந்திருந்தவர். மூத்த வலைப்பதிவர் என்ற தகுதி வந்த பின்னும் சிறிதளவும் ஓயாமல் இப்போதும் தரம் மிகு இடுகைகள் எழுதிக்கொண்டே இருக்கிறார்.

இணையமும் அதனுடானான தனது அனுபவமும் அவரது வரிகளின் இப்படி இருக்கின்றது.

இணையத்தமிழ் 1999-ஆம் ஆண்டு அறிமுமாகியிருந்தாலும் தமிழ் இணையத்தினுள் நான் நுழைந்தது 2001-இல். விகடன்.காமில் ‘கோணல் பக்கங்கள்’ எழுதிக்கொண்டிருந்த சாரு நிவேதிதாவுடன் விவாதிப்பதற்காகத் தொடங்கப்பட்ட யாகூ குழுமத்தில் சேர்ந்தேன். 2001 செப்டம்பர் 4-இல் நண்பர்கள் சிலருடன் ‘மரத்தடி’ யாகூ குழுமத்தைத் தொடங்கி குழுமத்தின் உரிமையாளர் மற்றும் மட்டுறுத்துனராக 2005 ஜனவரி வரை இருந்தேன். இந்தக் காலகட்டத்தில் கற்றுக்கொண்டது நிறைய. சந்தித்த நண்பர்களும் ஏராளம்.

தமிழ்வலைப்பதிவுகள் 2003இல் பிரபலமாகத் தொடங்கின. 2003 மே மாதம் ப்ளொக்-ஸ்பாட்டில் இரண்டு வலைப்பதிவுகளைத் தொடங்கினேன். ஜூன் 2003-இல் தமிழ்வலைப்பதிவுகளை ஓரிடத்தில் பட்டியலிடுவதற்காக http://tamilblogs.blogspot.com என்னும் வலைப்பதிவை தொடங்கினேன். தமிழ் வலைப்பதிவு பட்டியல் அது
. ஜூலை 2003இல் வலைப்பூ என்னும் வலைப்பதிவைத் தொடங்கினேன். வலைப்பூ வலைப்பதிவு, ப்ளொக்-ஸ்பாட்டில் .நெட்-க்கு நகர்ந்தது. அங்கிருந்து தமிழ்மணம் தொடங்கப்பட்டபோது நட்சத்திரமாக உருமாறியது

யாகூ குழுமத்தினூடாக தமிழ் இணையத்தில் நுழைந்த நான், வலைப்பதிவுகளில் ஆர்வத்துடன் ஈடுபட முக்கிய காரணம் வலைப்பதிவுகளின் கட்டற்ற சுதந்திரத் தன்மை. வலைப்பதிவுகள் வருவதற்கு முன்பிருந்த கட்டுப்பாடுகள், வலைப்பதிவுகளின் வருகைக்குப்பிறகு தளர்ந்துபோயின. பல விதமான குரல்கள், எவ்வித கட்டுப்பாடுமின்றி இணையத்தில் ஒலிக்கத் தொடங்கின. இம்மாதிரியான சுதந்திர ஊடகம் மக்களிடையே பிரபலம் ஆவதற்கு ஆரம்பத்தில் சில முன்னெடுப்புகள் தேவையாயிருந்தன. அம்மட்டில் அணில்போல சிலவற்றைச் செய்திருப்பதில் திருப்தி. ஆயினும் நாம் செல்லவேண்டிய தூரம் நீண்டது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விதயம்.
பிடித்த விதயங்கள் என்று பார்த்தால்: எதுதான் பிடிக்காது என்று சொல்லவேண்டும். எதையும் ஒரு முறை முயற்சி செய்துபார்த்துவிடும் குணம் என்னுடையது.

“தினக்குரலின்” வலைப்பூக்கள் பக்கத்திற்காக இவருடைய வலைப்பதிவை வாசிக்கத் தொடங்கிய தொடங்கிய போது 2003 ஆம் ஆண்டில் இருந்து எழுதி வரும் இவரின் பதிவில் எதை வாசிப்பது, எதை விடுவது என்ற குழப்பம் வேறு இருந்தது. இதை தவிர்த்து விடலாம் என்ற சொல்லக் கூடிய இடுகை எதுவும் இல்லை. அதே போல எல்லாமே தீவிர இலக்கியத்தையோ, அரசியலையோ பேசுபவை அல்ல. ஜனரஞ்ச நடையில் மெல்ல விரியும் அவரது அனுபவ எழுத்துக்கள், சொகுசு இருக்கையில் இருத்தி, பள்ளங்கள் தவிர்த்து அலுங்காமல் குலுங்காமல் நமை கொண்டு சேர்க்கும் சாரதி போன்றது. அது ஒரு இனிய பயணமாக அமைந்திருந்தால் அந்த நினைவுகள் மனதில் தங்கிவிடுவதும் உண்டு. அப்படியே இவரது அனுபவங்கள் எனக்குள்ளும் தங்கி விட்டிருக்கின்றது. உதாரணமாக இனிமேல் நானும் கனடா போக நேர்ந்தால் சாலைகளில் வாகனங்களை விபத்துக்குள்ளாக்கும் பனிக்காலம் பற்றிய அவதானமாய் இருக்க அது சொல்கின்றது.

ஒரு வலைப்பதிவை வைத்துக்கொண்டு பதிவிட நேரமில்லை என்பவர்கள் மத்தியில் திரைப்படங்கள் பற்றிய பார்வைக்கென்று ‘திரைப்பார்வை’ என்னும் பெயரிலொன்றும், புத்தகங்கள் பற்றிய பார்வைக்கு ‘புத்தக வாசம்’ என்றொன்றும், சமையல் பற்றிய எழுத ஆங்கிலத்தில் விருந்து என்றொரு பதிவும், ஆங்கிலத்தில் மற்றொரு பதிவுமென இவர் அசத்துகின்றார். சிற்றிதழ்கள், தீவிர இலக்கியம் பேசும் இணையங்கள் எங்கணும் காணக்கூடிய அரிய கட்டுரைகளையும், பேட்டிகளையும் மழை காலத்தை எதிர்நோக்கும் ஒரு எறும்பு போன்று சேர்த்து வைத்து, பின்னூட்டங்கள் வழி விவதாங்களும் நடந்தேறியிருக்கின்றது.

இணைய வசதி கொண்ட நிலமொன்றில் நீங்கள் தனித்திருக்க நேர்ந்தாலும், தனிமை போக்கி, வெளி உலகம் கண்டு, நேரத்தை அறிவின் முதலீடாய் மாற்ற இவரது பதிவுகள் துணை நிற்கும் என்பதை நீங்கள் வாசிக்கும் போது உணர்வீர்கள்.

ஞாயிறு தினக்குரல் வலைப்பதிவு அறிமுகம் - பாவையின் SKETH

கடந்த 2005 ஆம் ஆண்டில் இருந்து sketh என்ற பெயரில் பாவை எழுதி வரும் இந்த வலைப்பதிவில் அதிக இடுகைகள் இல்லைத்தான் என்றாலும், அனேக இடுகைகளில் அவதானிக்க கூடிய ஒன்றுள்ளது. இலங்கையின் கடந்த 30 வருடங்களில் எங்கள் எல்லோருக்கும் “மிக சாதாரணமாக” போய் விட்ட விசயங்களில் இன்னமும் அவருக்கு உயிர்ப்பு இருக்கிறது. அதற்கு உதாரணமாக இந்த வருடத்தின் முதலாம் நாள் அவர் “என்ன இது” என்ற தலைப்பில் இட்ட இடுகையை சொல்லலாம். தனக்கு பிடித்த ஓரிரு கவிதைகள், அவரது அனுபவங்கள் தவிர மற்ற அனைத்தும் நாங்கள் அனைவரும் அல்லது இலங்கையில் பலரும் பேசத் தயங்கும் விடயங்களை எள்ளல் நடையில் எழுத முடிந்திருக்கின்றது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு “புத்த பிக்குவோடு ஒரு நாள்” என்ற இடுகையை வாசித்து இருந்தேன். வலைப்பதிவில் எழுதும் அனேகரின் பல பதிவுகளை நாளாந்தம் படித்தாலும் மனதில் தாங்குபவை சிலதான். அந்த வகையில் இந்த பதிவில் எனது மனதில் பதிந்திருந்தது. ஏனென்றால் எனக்கு அதில் சொல்லியிருந்த விசயங்கள் புதுசுதான். பேருந்துந்தில் மதகுருமார்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில், புத்த பிக்குக்கு ஒருவருக்கு பக்கத்தில் இருந்தது சக பயணிகளால் அவர் இருக்கையை விட்டு எழுப்பபடுவதையும் எழுதும் அந்த பதிவு இப்படி முடிகின்றது.

அதற்குப் பிறகு நண்பர்கள் சொன்னார்கள், பிக்குவுக்குப் பக்கத்தில பெண்கள் யாரும் இருக்கக் கூடாதாம்.. ஆண்கள் வேணுமென்றால் இருக்கலாமாம் என்று. எனக்கெண்டா இது ஏனென்று புரியவேயில்லை. பெண்கள் பக்கத்தில் இருந்தால் அவர்கள் பிக்குகளாக இருப்பதன் புனிதம் கெட்டுப் போய் விடுமோ?

நாளாந்தம் பதிவுகளை இடும் பதிவர்கள் மத்தியில் 2006 ஆம் ஆண்டு இரண்டே இரண்டு இடுகைகளை இட்டு இருக்கின்றார். இரண்டும் மிக முக்கியமான இடுகைகள். “கேட்டாரே ஒரு கேள்வி” என்ற பதிவில் விடுதலைப்புலிகளின் பிடியில் இருக்கும் படைவீரனான தனது கணவனை விடுக்க கோரும் சிங்களப் பெண்மணி இறுதியில் இப்படி ஒரு வசனத்தை தொலைக்காட்சியில் கூறுகின்றார்.
பாதுகாப்புச் செயலரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாஜ ராஜபக்ஸ மயிரிழையில் உயிர் தப்பியதற்கு அவர்கள் எந்தளவு சந்தோஷப்பட்டார்கள் என்பதை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.... என் கணவர் விடுதலையானால் நானும் என் குடும்பமும் சந்தோஷப்படுவோமே..." என்று... தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்கிறார்கள் இல்லையே என்ற ஆதங்கத்துடன் அந்தப் பெண்மணி இப்படிக் கேட்டார்,..

இன்னொரு பதிவு முந்நூறா நூற்றுமுப்பது தானா? என்னும் பதிவும் சம்பள அதிகரிப்பு கேட்டு போராடும் மலையக தோட்டத் தொழிலாளர்களும் அதை மறைத்து தமது அமைச்சு பதவிகளை தக்க வைக்க கதை சொல்லும் அரசியல் வாதிகளை பற்றியது.

இன்னொரு பதிவும் இருக்கிறது. “மரணம் வலி தருமா? என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் அந்த இடுகையில் இவரது வேறு இடுகைகளில் எங்குமில்லாதவாறு செழுமையான சொற்களால் எழுதப்பட்டிருக்கின்றது. மரண வீடுகளை தவிர்க்க விரும்பும் அல்லது மரண செய்திகளுக்கு போலி அனுதாபம் காட்ட விரும்பதவர்கள் நம் மத்தியில் இருந்தாலும் சமூகம் அவர்களின் அனுதாபத்தை வலிந்து கேட்கின்றது எதிர்பார்க்கின்றது. அது தொடர்பாக அவர் எழுதியிருக்கு இடுகை இப்படி இருக்கின்றது.
சமீப காலமாக ஒரே மரணச் செய்திகள்.. மரணம் மலிந்து விட்ட நாட்டில் இருந்து கொண்டு குடும்பத்தில், உறவினர்களில் பலரையும் இழந்து பழக்கமாகி போன நிலையில் இப்போதெல்லாம் எந்தவொரு உயிரிழப்பும் என்னைப் பாதிப்பதில்லை.. கேட்ட நிமிடத்தில் ஏற்படும் அந்த ஒரு உணர்வைத் தவிர வேறு உணர்வுகளற்ற மரக்கட்டையாகி போனேனோ என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இன்றைய மரணம், இல்லை இன்னமும் உணர்வுள்ளவளாக இருக்கிறாயென்று உணர்த்தியது..

சமீப காலமாக மரணத்திற்காக கவலைப்படுபவர்களாக காட்டிக் கொள்பவர்கள், துக்கம் விசாரிப்பவர்கள், என்ன நடந்தது என்று ஆதியோடந்தமாக கேட்டுக் கொள்பவர்கள், என்று யாரைப் பார்த்தாலும் ஒரு விதமான எரிச்சலே வருகிறது..

ஒரு மாதம் இருக்கும்.. அப்பாவின் சகோதரி(மாமி) இறந்து விட்டதாக யாழ்பாணத்திலிருந்து அழைப்பு வந்தது.. காலை வேளையில் வரும் தொலைபேசி அழைப்புக்கள் இந்த மாதிரியான செய்திகளையே கொண்டு வரும் என்று தெரியும். அத்தோடு இரண்டு நாட்கள் முன்பாக அவர் இறக்க முதலே இறந்தாக வந்த செய்தி அவரின் இறப்பு நிச்சயம் என்று தெரிவித்திருந்தது.. ஆகவே தொலைபேசி அடிக்கும் போது அண்மையில் இருந்தும் அம்மா எடுக்கட்டும் என்று பேசாமல் இருந்தேன்..

மரணத்தின் மீது கொண்ட பயத்தாலல்ல.. செய்தியை சொல்பவருடன் அது பற்றி கதைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காகவே... சொந்தங்களுடன் அவ்வளவாக நெருங்கிப் பழகாத குணம் என் குடும்பத்தவர்க்கு இருந்த போதும் மாமி குடும்பத்தோடு ஒட்டுறவாகவே என்றும் இருந்து வந்தோம். அருமையான ஒரு பெண்மணி.. எந்த ஒருவரும் அவரைக் குறை சொல்லி நான் அறிந்ததில்லை.. எல்லோருடனும் நல்லுறவைப் பேணி வந்தவர் அவர்..

மீண்டும் ஒரு மரணம்... என்னைத் தன் மாதிரியாக(Model) நினைக்கும் என்னை விட இரண்டு வயது குறைந்த தோழியின் அப்பா... சிறு வயதில் எங்களுடன் கிரிக்கெட், கரம், காட்ஸ், செஸ் என எல்வாவற்றிலும் சேர்ந்து கொள்வார்.. அந்த காலத்தில் தன் பிள்ளையைப் போலவே என்னையும் நடத்தியவர்.. அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து தொலைபேசி மூலம் ஒரு காலை நேரத்தில் தெரிய வந்தது.. அந்த நேரம் அம்மா சமையல் வேலையில் இருக்க நானே அழைப்பை எடுக்க வேண்டியதாக போயிற்று.. செய்தியை என்னிடம் சொல்ல எதுவுமே கூறாது அம்மாவிடம் கொடுத்து விட்டு செய்து கொண்டிருந்த வேலையைத் தொடர்ந்தேன்..

பரீட்சைக்காக விடுமுறை எடுத்திருந்த வாரத்தில் என் மேலாளரின் தகப்பானாரின் மறைவு.. 95 வயது வரை நன்றாக இருந்தவர்.. கடைசி நிமிடத்திலும் நன்றாகவே இருந்தாராம்... மரண வீட்டிற்கு செல்லவில்லை.. உண்மையைச் சொன்னால் எனக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணமே கிடையாது.. 95 வயது வரை வாழ்ந்தவர் இன்னமும் வாழ்ந்திருக்கலாமேயென்ற என் துக்கத்தை பகிர்ந்து கொள்ளவா போகப் போகிறேன்..

சம்பிரதாயத்துக்காகத் தானே.. சம்பிரதாயத்தக்காக எதையும் செய்ய வேண்டிய கடப்பாடு எனக்கு இல்லை என்ற நினைப்போடு இருந்த போதும் அவர் மீண்டும் வேலைத்தளம் வரும்போது எவ்வாறு எதிர்கொள்வது என்ற குழப்பம் நேரிட நண்பியைக் கேட்டேன்.. ஆறுதல் தெரிவித்து அயடை அனுப்பி விடு என்றாள்.. ஆறுதல் சொல்ல வேண்டுமென்ற எண்ணமும் இல்லை என்று அவளுடன் விவாதித்தேன்.. மற்றவர்கள் சென்று வந்திருந்த நிலையில் அயடை தானே, அனுப்பி விடு, இல்லாவிடில் நேரில் வரும் போது எதிர் கொள்ள கஷ்டம் என்ற அவளது ஆலோசனையின் நிமித்தம் அயடை அனுப்பினேன்..

மீண்டும் என் நண்பியின் அப்பாவின் மரணம்.. வேலை நேரத்தில் செல்ல வேண்டி ஏற்பட்டதால், காரணத்தை சொல்லி அனுமதி கோரினேன்.. அவரின் மனதில் எப்படியும் இவள் தனது வீட்டு நிகழ்வுக்கு வரவில்லை என்ற நினைப்பு வந்திருக்கும் தானே... இது போன்ற சந்தர்ப்பத்தை தவிர்ப்பதற்காகத் தான் போயிருக்க வேண்டுமோ என்ற அந்த நிமிடத்தில் ஏற்பட்டது.

சரி.. நான் தான் எதற்காக மரண வீட்டிற்கு செல்கிறேன்.. உண்மையாக எனக்குள் கவலை இருக்கிறதா? நண்பி தகப்பனை இழந்து விட்டாள் என்ற வருத்தத்தை தவிர வேறு என்ன கவலை எனக்கு.. நான் போவது அவளுக்க உண்மையாகவே ஆறுதலை அளிக்குமா?

மரண வீட்டில் இருப்பவர்கள் எதற்காக அழுகிறார்கள்? சென்ற உயிருக்காகவா? இல்லை குறிப்பிட்ட அந்த உறவு இல்லாமல் இனி என்ன செய்யப் போகுறோம் என்பதற்காகவா? இப்படி யோசிப்பது பைத்தியக்காரத்தனமாக தோன்றினாலும் மரண வீட்டில் வைத்து என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை..


உறவுகளின் மரணம் பற்றிய பாதிப்பு இல்லாதபோதும் ஒரு சில மரணங்கள் ரொம்பவும் பாதிக்கின்றன.. அந்த மரணம் கூட எதற்காக என்னைப் பாதிக்கிறது.. போராட்டத்தில் ஒரு ஈடு செய்ய முடியாத அங்கத்தவரை இழந்து விட்டோம் என்பதற்காகவா என்று கேட்டால் ஆம் அதுவும் தான்... ஆனால் அது மட்டுமல்ல...

இன்று வேலைத்தளத்தில் இருந்த போது அம்மாவின் தொலைபேசி அழைப்பு..

net இல் news பார்த்தியா?

இல்லை ஏன்?

கேட்டனான்.. - அம்மாவின் குரல் சரியாக இல்லை

என்னாச்சு, சொல்லங்கோவன்..

குண்டுத் தாக்குதலாம்..

எங்க கொழும்பிலயோ..

இல்லை கிளிநொச்சியில்.. அழைப்பு துண்டிக்கப்பட்டது..


என்ன இது.. நெடுகத்தானே கிளிநொச்சியில போடுறாங்க.. இவ என் இப்படி பதட்டப்படுகிறா.. (என்ன ஒரு நினைப்பு.. அடிக்கடி போட்டால் அடிக்கடி மரணச் செய்திகள் கேட்டால் அந்த மரணங்களில் இழப்பு புரிந்து கொள்ளப்படாத நிலை) யோசிச்சுக் கொண்டே செய்தியைப் பார்த்தேன்.. எதிர்பார்க்காத செய்தி.. அம்மாவின் பதட்டத்திற்கான காரணம் புரிந்தது..

என்று தொடரும் அந்த இடுகையின் மிகுதியை அவரது பதிவில் வாசியுங்கள். ஓரிரண்டு இடுகை தவிர பாவையின் அனைத்து இடுகைளும் வாசிக்கப்பட வேண்டியவையே.